Posts

இணைய வழிக் கல்வியும் மாணவர்களும்

சமகாலத்தில் கல்வியானது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இன்றியமையாத விடயமாகும்.  இக்காலகட்டத்தில் நாம் யாராலும் மறுக்க முடியாத ஓர் சூழ்நிலைக்கு மாணவர்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, தற்பொழுது உலகளாவிய ரீதியில் மிக வீரியமாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று பல உயிர்களைக் காவு கொண்டது மட்டுமன்றி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் கேள்விக் குறியாக்கி விட்டது. இதனால் மாணவர்கள் தற்போது அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது,

ஆகவே, இந்த சீரற்ற சூழ்நிலையிலும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நவீன யுகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழினுட்ப முறைiயான இணையவழிக் கல்வி முறையினைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்;. இந்த இணைய வழிக் கல்வி முறையே தற்கால நிலைமையில் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு சாத்தியமாக காணப்படுகிறது. இதனால், தற்போது இணையவழிக் கல்வி  உலகில் பரவலாகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது,

இந்த இணையவழிக் கல்வி முறையானது, மாணவர்களின் கல்வித் தேவையை ஈடுகட்டக் கூடியதாக காணப்படினும், அதனுள்ளும் ஒரு சில சாதக பாதக விளைவுகளும் காணப்படுகின்றன. 

சாதக விளைவுகள் பற்றி எடுத்து நோக்கின், இணைய வழக் கல்வி முறையின் ஊடாக குறித்த பாடத்தினை இலகுவாகவும் விரைவாகவும் வழங்க பல்வேறு ஊடகங்களான, காணொளிகள், ஒலிக்கோப்புகள், மின்வடிவான படங்கள், அசைவுப் படங்கள் போன்ற பலவற்றை உபயோகிப்பதன் மூலம் உரிய பாடத்திற்கான விளக்கத்தை ஆசிரியர்களால் மாணவர்களுக்கு இலகுவாக கொண்டு சேர்க்க முடியும்.

இணையவழிக் கல்வியின் பிறிதொரு சாதக விளைவாக, இணைய வகுப்பில் கற்கின்ற போது பாடத்திற்கான விளக்கத்தைப் பதிவு செய்து அவற்றினை மீண்டும் கேட்டு கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இங்கு காணப்படுகிறது. இதனால் நிலையான சிறந்த தெளிவைப் பெறலாம். மற்றும் இந்த இணையவழிக் கல்வி முறையில் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வழங்கும் பல கல்விச் சேவைகளை நேரடியாக பெற முடியாத மாணவர்களுக்கு இலகுவாக தங்களுடைய வீட்டில் இருந்தவாறே அவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையும் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி, இணையவழிக் கற்கையைத் தொடரும் போது இடையில் ஏற்படுகி;ன்ற பாட சந்தேகங்களைத் தீர்க்க பாட ஆசிரியர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக ஆசிரியர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசியூடாகவோ தொடர்பு கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில், இணையத்தளங்களிலிருந்து தேவையான தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்த இணையவழிக் கல்வி முறையானது ஒருசில செயன்முறைகளை எளிதாக்குகிறது. குறிப்பாக ஒரு மாணவன் பாடசாலை சென்று கற்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டால் அவருக்கு ஆகும் நேரம், பொருள் என்பவற்றின் செலவைவிட இணையவழிக் கல்விக்காக செலவிடும் நேரம், பொருள் என்பன குறைவாகவே காணப்படுகின்றது. அது மட்டுமன்றி இணையவழிக் கற்றலானது நேரடிக் கற்றல் போன்று ஆசிரியர்களும் மாணவர்களும் குறித்த ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் கூடி செயற்பட வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக இங்கு ஆசிரியர்கள் தங்களுக்கு வசதியான நேரங்களில் மாணவர்களுக்கான உரிய பாடவிளக்கங்களை பதிவிட்டு இணையத்தில் ஏற்றிவிடலாம். அதே போல, மாணவர்களும் தங்களுடைய இருப்பிடத்திலேயே இருந்து கொண்டு தங்களுக்கான வசதியான நேரத்திலும் அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சலுகையும் உள்ளது.

அத்தோடு மாணவர்களுக்குத் தேவையான பாடத்தெளிவையும் இந்த இணையவழி இலவசக் கல்விச் சேவையின் மூலம் அடைந்து கொள்ளலாம். அதாவது, இலவச ஒன்லைன் நூலகத்தில் இணைந்து தேவையான பாட விடயங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பயன் தரக் கூடிய இலவச இணைய வகுப்புகளிலும் குழுமங்களிலும் இணைந்து பயன் பெறலாம். மற்றும் பாடம் சார் பிற இணையத் தளத்தில் தேடிக் கற்கவும் முடிகின்றது. இதனால் மாணவர்களுக்கு பாடம்சார் முழுமையானதும் தெளிவானது சிறந்த அறிவினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இணையவழிக் கற்றலின் இன்னொரு சாதக விளைவாக அமைவது, இணையவழிக் கல்வியானது நேரடிக் கற்றலைப் போன்று வெறும் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கு செல்லும் ஒருவழிப்பாதையாக மாத்திரம் அமையாது, பல்வேறு பல்லூடகங்களையும் கையாள்வதன் மூலம், இது பல்வழிப்பாதையாகவும் அமைகின்றது, இவ்வாறு பல்வழி முறையாக ஆசிரியர்கள் பாடத்தினை கற்பிக்கும் போது பாடவிளக்கங்கள்  மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியக் கூடியதாக காணப்படுகின்றது.

மறுபுறம், இணையவழிக் கல்வி முறையானது பல சாதகமான விளைவுகளை வழங்கினாலும் நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பது போலவே இதிலும் சில பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. எனினும் இணையவழிக் கல்வியில் காணப்படுகின்ற அனைத்து பாதக விளைவுகளையும் முழுமையானதாக அவற்றைப் பயன்படுத்துவதனாலேயே தோற்றுவிக்கப்பட்டது எனக் கூறிவிட முடியாது. ஒரு சில மாணவர்கள் அவற்றைக் கையாளும் முறையிலும் அதன் சாதக, பாதகத் தன்மை அடங்கியுள்ளது,

குறிப்பாக இணையவழிக் கற்றலானது நேரடிக் கற்றலைப் போல முழுமையாக மாணவர்களைச் சென்றடைவதில் சில தடைகளும் காணப்படுகின்றன. தொழினுட்பக் கோளாறுகளின் காரணமாக மாணவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்பில் இணைந்து கொள்ள முடியாமை, ஆசிரியர்களினால் கற்பிக்கப்படும் அனைத்துக் கற்பித்தல்களும் பூரணமாக மாணவர்களைச் சென்றடையாமை .இதனால் மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமான பூரணமான தெளிவு கிடைக்காமை போன்ற பாகங்கள் காணப்படுகின்றன. 

இக்கற்கை முறையின் இன்னொரு பாதக விளைவாக அமைவது இணையவழிக் கல்வியின் போது ஏற்படுகின்ற பாட சந்தேகங்களைத் தீர்க்க நேரடி வகுப்பு போன்று உடனடியாகவும் இலகுவானதாகவும் அப்பொழுதே கேட்டு அறிந்து கொள்ள முடியாமல் போகின்றது. அத்தோடு சில நேரங்களில் இணையவழியில் நிண்ட நேரக் கற்பித்தல் இடம்பெறும் போது அதிக நேரம் தொழினுட்ப சாதனங்களான தொலைபேசி, மடிக்கணினி என்பவற்றைப் பயன்படுத்த வேண்டி இருப்பதால் இது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றது. குறிப்பாக தலைவலி ஏற்படல், கண்பாதிப்பு, அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, கவனச் சிதறல்கள் போன்ற பலவிதமான பாதிப்புக்களும் ஏற்படக் காரணமாகின்றது. இதனால் மாணவர்களுக்கு நாளடைவில் கற்றலின் மீதான ஆர்வம் குறைவடையும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. 

மேலும் இணையவழிக் கல்வி முறையினைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது ஆசிரியர்களினால் மாணவர்களின் கல்வித் தரம் தொடர்பாக சரியாக விளங்கிக் கொள் முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக மாணவர்கள் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கிறார்களா? இணைய வகுப்பில் இயைந்து சரிவர பாடவிளக்கத்தைப் பெற்றுத் தெளிவடைகின்றார்களா? அவர்கள் பாடத்தில் காட்டும் ஆர்வம் தொடர்பாகவும் மற்றும் குறித்த பாடவேளைக்காக வழங்கப்படுகின்ற பயிற்சிகைளை உரிய நேரத்திற்குள் சரிவர செய்து முடிக்கிறார்களா? இவை போன்ற பலதரப்பட்ட தகவல்களை ஆசிரியர்களால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுவதையம் அவதானிக்க முடிகின்றது. மற்றும் இணையவழிக்கற்றலின் போது, மாணவர்களுக்கு வகுப்புக் கற்றலைப் போன்று கற்றலுக்கான பூரண அவதானத்தை செலுத்த முடியாதும் காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணமாக வீட்டின் உறுப்பினர்களின் உரையாடல் போன்ற மாணவர்களுக்கு ஏற்படுகின்ற இடைத் தொந்தரவுகளினால் பாடத்தின் முழுமையான விளக்கத்தையும் உள்வாங்க முடியாமல் போகின்றது. 

அத்தோடு இந்த இணையவழிக் கல்விpயினைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதனூடாக தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொண்டு ஒரு சில மாணவர்கள் சில தவறான பாதையில் பயணிப்பதுமுண்டு. இதனால் வறுமைக் காலத்திலும் பிள்ளைகளின் கல்விக்காக தொலைபேசி வாங்கித் தந்த பெற்றோரை அவல நிலைக்கு உட்படுத்துவது மடட்டுமன்றி அம்மாணவி கற்கும் பாடசாலையின் நன்மதிப்பையும் சீர்குலைத்து வருகின்றது. 

இன்னும் சிலர் இணையவழிக் கற்றலில் ஈடுபடும் போது ஆசிரியர்கள் கற்பிக்கும் கற்பித்தலைக் கவனிக்காது தேவையற்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். குறிப்பாக தமது நண்பர்களுடன் தேவையற்ற உரையாடல், மற்றும் காணொளிகளைப் பார்வையிடல் போன்ற செயற்பாட்டிற்காக பாடநேரத்திலும் தம்மை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இந்த இணையவழிக் கல்வி முறையானது, சாதாரணமாக நேரடிக் கற்றலில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான பூரண தெளிவின்மையால் அவர்களுக்கும் பெரும் சவாலாக அமைகின்றது.

இந்த இணையவழிக் கல்வி முறையானது பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமாக அமைவதில்லை. குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது. இணையவகுப்பில் இணைவதற்கான அடிப்படைத் தேவைகளான தொழில் நுட்பசாதனங்களையும் கூட பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர் கொள்வது கண்கூடாகத் தெரிகின்றது.

எவ்வாறாயினும் தற்கால சூழ்நிலையினைக் கருத்திற் கொள்ளும் போது இந்த இணையவழிக் கல்வி முறையே ஒரு மாற்றுத் தீர்வாகக் காணப்டுகின்றது. இதில் காணப்படுத் பாதகமான முறைகளை அவற்றைக் கையாளும் அடிப்படையின் மூலம் சாதகமாக மாற்றி அமைக்கலாம் மாணவர்களுக்கு இந்த இணையவழிக் கற்றல் பற்றிய பூரண தெளிவை வழங்குவதன் மூலமும் கவனச் சிதறல்கள்களை நிவர்த்தி செய்ய முடியும். இணையவழிக் கல்வி ஒருபக்கம் சார் தீர்வாக மட்டும் அமையாது அவ்வப்போது கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதன் மூலமாக மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தவிர்க்க முடிவது மட்டுமன்றி சந்தேகங்களைப் போக்குவதற்கும் மற்றும் மாணவர்களின் கற்றலின் மீதான பங்களிப்பினையும் அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும். 

எவ்வாறாயினும் இந்த இணையவழிக் கல்வி முறையானது வழக்கமான நேரடிக் கற்றலின் அனுபவத்தை ஒருபோதும் தந்துவிட முடியாது. கொரோனா பொது முடக்கக் காலத்தில் ஒரு சிறிய மாற்று முயற்சியாகத்தான் இதைக் கருதவேண்டுமே தவிர நேரடிக் கற்றலுக்கான மாற்று முறையாக இதை ஒரு போதும் கருத முடியாது என்பதனை மனதிற் கொண்டு கற்பதன் மூலம் கற்றலில் விருத்pயைக் காணலாம்


Post a Comment